லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதா, தனித்து
போட்டியிடுவதா என்பது குறித்து, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு
கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, சூடுப்பட்ட
பூனையாக மாறியுள்ள தே.மு.தி.க., அந்த காயத்திற்கு மருந்துபோட, லோக்சபா
தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆட்சியில், எலியும், பூனையுமாக இருந்தவர்கள், எதிரிக்கு எதிரி நண்பன்
என, ஒன்றிணைவார்கள் என்றும் கூறப்பட்டது.தி.மு.க., கூட்டணியில்
தே.மு.தி.க., ஒன்பது சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும்
ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், பல மாதங்களாக தகவல் வலம்வருகிறது. இந்நிலையில்,
மதுரையில் பேட்டியளித்த அழகிரி, "வழக்கை சந்திக்க முடியாத விஜயகாந்த்
எப்படி முதல்வர் ஆக முடியும்' என, கூறினார்.
இது தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில், விஜயகாந்தும், அழகிரியும் சந்தித்து
பேசிக்கொண்டனர். இருப்பினும், அழகிரியின் கருத்தால், விஜயகாந்த் மற்றும்
அக்கட்சியினரின் கோபம் குறையவில்லை.சமீபத்தில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல்
விழாவில் பங்கேற்ற விஜயகாந்த், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என்ற
அறிவிப்பை வெளியிட்டார். இது தி.மு.க.,வினருக்கு மட்டுமின்றி, லோக்சபா
தேர்தலில் கூட்டணி வரும், வருமானத்திற்கும் வழி பிறக்கும் என்றிருந்த
தே.மு.தி.க.,வினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து,
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், விஜயகாந்திடம் நேரடியாகவே
எடுத்துரைத்துள்ளனர். ஆனால், அவர் தனது மனநிலையை மாற்றிக்கொள்ளவில்லை என,
தெரிகிறது.இந்த நிலையில், இம்மாதம், 25ம்தேதி, சென்னை வானகரத்தில் உள்ள
ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், தே.மு.தி.க., செயற்குழு மற்றும்
பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.கட்சியில் பலரும், கூட்டணி என்ற கனவில்
உள்ள நிலையில், தலைவர் மட்டும் தனித்துபோட்டி என்று அறிவித்துள்ளது
கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு முடிவு கட்டும்
வகையில், கூட்டணியா, தனித்து போட்டியா என்ற ஓட்டெடுப்பை, இக்கூட்டத்தில்
நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.